ரஜினிக்கு கதாநாயகன் வேடமா? கூடவே கூடாது!

‘முள்ளும் மலரும்’ படத்தின் கதாநாயகனாக ரஜினிகாந்தை நடிக்க வைக்கலாம் என்று டைரக்டர் மகேந்திரன் கூறிய யோசனைக்கு, பட அதிபர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

மகேந்திரன், ஆரம்பத்தில் ‘துக்ளக்’ பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர். அப்போது, சினிமா விமர்சனங்கள் எழுதி வந்தார். தமிழ்ப் படங்களின் தரத்தைப்பற்றி, `கிழி கிழி’ என்று கிழிப்பார். பிறகு அவர் சிவாஜியின் ‘தங்கப்பதக்கம்’ படத்தின் மூலம், திரைப்பட கதை-வசன கர்த்தா ஆனார்.

முள்ளும் மலரும் எழுத்தாளர் உமா சந்திரன் எழுதிய ‘முள்ளும் மலரும்’ நாவல் அவரை மிகவும் கவர்ந்தது. குறிப்பாக அதில் வரும் காளி கதாபாத்திரம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. எனவே, அக்கதைக்கான திரைக்கதையை மனதில் உருவாக்கி வைத்திருந்தார்.

இந்த சமயத்தில், ஆனந்தி பிலிம்ஸ் பட அதிபர் வேணு செட்டியார், மகேந்திரனைத் தேடி வந்தார். படம் தயாரிக்கலாம் என்றிருக்கிறேன். ஒரு கதை சொல்’ என்று கேட்டார். என்னிடம் ஒரு கதை இருக்கிறது. அண்ணன் – தங்கச்சி கதை’ என்றார், மகேந்திரன்.

உடனே, வேணு செட்டியார் மகிழ்ந்து போனார். மீண்டும் ஒரு பாசமலர் கதையை மகேந்திரன் உருவாக்கி விடுவார் என்று எண்ணி, இது போதும். மேற்கொண்டு கதை எதுவும் சொல்ல வேண்டாம். படத்தை நீயே டைரக்ட் செய்! என்று கூறினார்.

அதன் பின்னர் நடந்தது பற்றி மகேந்திரன் ஒரு கட்டுரையில் எழுதியிருப்பதாவது:-

அண்ணன் காரெக்டருக்கு யாரைப் போடலாம்? என்று உற்சாகமாக கேட்டார், வேணு செட்டியார். ரஜினிகாந்த் என்றேன். அவர் முகம் கறுத்துவிட்டது. என்ன விளையாடுறியா? வில்லனா நடிக்கிற ஆளு! நல்ல கருப்பு வேற! வேணவே வேணாம். வேறே யாரையாச்சும் சொல்லு’ என்றார். இதுலே எந்த மாற்றமும் இல்லை. காளி காரெக்டருக்கு அவர்தான் நூறு சதவிகிதம் பொருத்தமாக இருப்பார். வேறு எந்த நடிகரையும் என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை என்று நான் உறுதியாகப் பதில் அளித்தேன்.

உனக்கு ரஜினிகாந்த் நெருக்கமான நண்பர் என்பதால் இப்படி அடம் பிடிக்கிறாயா? என்று செட்டியார் கேட்டார். அவர் அப்படிக் கேட்டதில் தப்பில்லை. எங்கள் இருவரின் நட்பு எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனால், எங்கள் நட்பு காரணமாகவா `முள்ளும் மலரும்’ படக்கதையின் முக்கிய கதாபாத்திரமான அந்த அண்ணன் `காளி’ வேடத்தில் ரஜினிதான் நடித்தாக வேண்டும் என்று உறுதியாய் நின்றேன்? இல்லை. அவருக்குள்ளிருந்த அற்புதமான குணச்சித்திர நடிகனுக்குரிய ஆற்றலை நான் தெரிந்து வைத்திருந்தேன். அவர் எனது நண்பராய் இல்லாதிருந்தாலும் கூட அவரைத்தான் அந்தக் `காளி’ பாத்திரத்தில் நடிக்க வைத்திருப்பேன் என்பதே உண்மை.

நான் தீர்மானமானத்தோடு அவர்தான். அவரேதான் நடிக்க வேண்டும்’ என்று பிடிவாதமாய் நின்றேன். முதலில் ஒரு டைரக்டருக்கு வேண்டியது முழுமையான சுதந்திரம். அதையே மறுக்கிற நீங்கள், என்னை டைரக்டராக நினைத்திருக்க வேண்டாமே.

இந்த மாதிரியான டைரக்டர் ஸ்தானம் எனக்கு வேண்டவே வேண்டாம்’ என்று என் முடிவை தெளிவாகச் சொன்னேன். இறுதியில் செட்டியார் சம்மதித்தார். இருவரும் சென்று நண்பர் ரஜினியைப் பார்த்தோம். நான் முதன் முதலாக படம் இயக்கப் போகிறேன் என்று அறிந்து மனம் மகிழ்ந்த ரஜினி, அவர்தான் படத்தின் `ஹீரோ’ என்று சொன்னதும், எப்படி… எப்படி… அந்தக் காரெக்டர் எப்படி? என்று பரபரவென ஆர்வமாகிவிட்டார்.

செட்டியாரை வீட்டுக்கு அனுப்பிவிட்டுத்தான் அவரிடம் `முள்ளும் மலரும்’ திரைக்கதையை முழுமையாகச் சொன்னேன். அவருக்குள் அப்பொழுதே அந்த `காளி’ பிரவேசித்து விட்டான். பிறகு நான் மனதில் உருவகப்படுத்தியிருந்தபடியே இதர கதாபாத்திரங்களுக்காக ஷோபா, படாபட் ஜெயலட்சுமி, சரத்பாபு எல்லோரும் கிடைத்தார்கள்.

கர்நாடகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 2 ஆயிரம் கிலோ மீட்டர் சுற்றி அலைந்து, `சிருங்கேரி’ என்ற இடத்தில் படப்பிடிப்பை நடத்த தீர்மானித்தோம். உச்சகட்டம் படத்தின் இறுதிக்கட்டம்-உச்சகட்டம் -அண்ணனை விட்டுப் பிரிந்து தன்னை மணக்கப்போகும் என்ஜினீயரோடு செல்லும் வள்ளி, அண்ணன் காளியிடமே மீண்டும் ஓடி வருவாள். கட்டிப்பிடித்து அழுவாள். ‘எனக்கு நீதான் முக்கியம்’ என்பதைத் தனது அழுகையாலே உணர்த்துவாள்.

அண்ணன் காளிக்கு (ரஜினிகாந்த்) பெருமை பிடிபடாது. தங்கையை அழைத்துக்கொண்டு மணமகனிடம் (சரத்பாபு) வருவார். உலகத்தில் அண்ணனே தனக்கு எல்லாம் என தன் தங்கை நிரூபித்து விட்ட மகிழ்ச்சியைக் கூறுவார். இப்ப என் தங்கச்சியை உங்களுக்கு மனைவியாக்க நான் சம்மதிக்கிறேன். ஆனா இப்பவும் உங்களை எனக்குப் பிடிக்கலே சார்…’ என்பார். அதுதான் காளியின் விசேஷ குணாதிசயம்.

வழக்கமான தமிழ் சினிமாக்களில் `காளி’ போன்ற காரெக்டர் கடைசியில் என்ஜினீயரிடம் சமரசமாய்ப் போய்விடுவது போலக் காட்டிவிடுவார்கள். இங்கேயோ தங்கையை மணக்கப்போகிறவனைப் பார்த்து, கடைசியில் கூட ‘இப்பவும் உங்களை எனக்குப் பிடிக்கலே சார்’ என்கிறான்.

இந்தக் காட்சியை படமாக்கும்போது, திடீரென சரத்பாபு காணாமல் போய்விட்டார். கடைசியில் அவரை மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திலிருந்து இழுத்து வந்தார் தயாரிப்பாளர். அது எப்படி, இப்பக்கூட என்னைப் பிடிக்கலைன்னு இந்த ஆள் சொல்லலாம்? என்று என்னிடம் சரத்பாபு கோபப்பட்டபோது நான் சிரித்துக்கொண்டே சொன்னேன்: சரத்… கதைப்படி, காட்சிப்படி காளி என்கிற காரெக்டர்தான் என்ஜினீயரை வெறுக்கிறான் இப்படிக் கடைசி வரைக்கும். ஆனா, காளியா நடிக்கிற ரஜினிகாந்த் என்ஜினீயரா நடிக்கிற சரத்பாபுவை வெறுக்கலே! என்று விளக்கிய பிறகுதான், அவருக்கு ‘சினிமா வேறு, வாழ்க்கை வேறு’ என்று புரிந்தது.

சரத்பாபு தனிப்பட்ட முறையில் ஒரு அற்புதமான மனிதர். அவரை `ஜென்டில்மேன்’ என்றுதான் குறிப்பிடுவேன். `முள்ளும் மலரும்’ அவருக்கு ஆரம்பகட்டம். குழந்தைபோல நடந்து கொண்டார். படம் தயாராகி முடிந்தது. அதன் முதல் பிரதியைப் பார்த்துவிட்டு வெளியே வந்த பட அதிபர் வேணு செட்டியார், என்னைப் பார்த்ததும், அடப்பாவி! என் தலையிலே மண்ணை அள்ளிப் போட்டுட்டியே! படத்துலே வசனமே இல்லை. அங்கே ஒண்ணு, இங்கே ஒண்ணு வருது! படமா எடுத்திருக்கே! என்று என்னை ஆவேசமாய்த் திட்டித் தீர்த்து விட்டுப் போய்விட்டார்.நான் சிறிதும் கோபப்படவில்லை.

அவர் வழக்கமான கமர்ஷியல் புரொடியூசர். அவர் எதிர்பார்த்தது, வழக்கமான சினிமா நாடக பாணி வசனம். குறைந்த வசனங்களை நான் எழுதியிருந்ததால் அவருக்கு அப்படி கோபம் வந்தது. இளையராஜா முதன் முதலாக பின்னணி இசையின் ஆழமான ஞானத்தை வெளிப்படுத்திய படம் ‘முள்ளும் மலரும்.’ படம் வெளியானது. முதல் மூன்று வாரங்கள் படம் பார்த்தவர்கள் மவுனமாகவே கலைந்து சென்றார்கள். செட்டியாரோ ‘படம் அவ்வளவுதான். நம்ப கதை முடிஞ்சு போச்சு!’ என்றார்.

நானும் நண்பர் ரஜினியும் பதை பதைக்கிறோம்… இந்தப் பரீட்சார்த்த திரைக்கதை மக்களிடம் ஜெயிக்க வேண்டுமே’ என்ற ஏக்கம் எனக்கு. தனது குணச்சித்திர நடிப்பிற்கு, இந்தப்படம் திருப்புமுனையாக அமைய வேண்டுமே என்ற ஆதங்கம் ரஜினிக்கு.

படத்திற்கு இன்னும் நன்றாய் பப்ளிசிட்டி பண்ணுங்கள்’ என்று செட்டியாரிடம் மன்றாடினோம். ஓடாத படத்திற்கும் பப்ளிசிட்டி தேவை இல்லை; ஓடுகிற படத்திற்கும் பப்ளிசிட்டி தேவை இல்லை… அது தெரியுமா, உங்களுக்கு? என்றார் செட்டியார்.

அப்புறம் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. நான்காவது வாரத்திலிருந்து தியேட்டரில் திரண்டது கூட்டம். ஆரவாரம்… கைதட்டல், பிளாக்கில் டிக்கெட்… பாராட்டு மழை… நூறாவது நாள் வரை ஓயவில்லை. படத்தின் வெற்றியைக் கண்ட வேணு செட்டியார் நான்காவது வாரமே என் வீட்டிற்கு வந்தார்.

மகேந்திரா! உன்கிட்டே நான் கோபப்பட்டதுக்கு என்னை மன்னிச்சிருப்பா. இந்தா பிளாங்க் செக். எவ்வளவு தொகை வேணுமானாலும் எழுதிக்கொள்’ என்று செக்கை நீட்டினார்.

நான் அன்போடும், நன்றியோடும் மறுத்து, இப்படி ஒரு வித்தியாசமான படம் இயக்கும் வாய்ப்பைத் தந்ததே பல்லாயிரம் கோடிகளுக்குச் சமம். இந்த செக்கை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்’ என்று கூறினேன். ‘முள்ளும் மலரும்’ படத்தை, பத்திரிகைகள் அனைத்தும் முழு மனதோடு பாராட்டின. ‘சினிமா என்பது செவிக்கு விருந்தளிப்பதல்ல. கண்ணுக்கு விருந்தளிப்பது என்பதை நிரூபித்த தமிழ்ப்படம்’ என்று விமர்சித்தன.

இவ்வாறு மகேந்திரன் கூறியுள்ளார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: