துணை இழந்த ஈழத்தமிழ் பெண்களும் சமூக வஞ்சனையும்

30 ஆண்டுகளாக சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தத்தின் போது தமது கணவன்மாரை இழந்த ராதிகாவைப் போல பல பெண்கள் உட்பட வடக்கு கிழக்கில் தற்போது 89,000 வரையான கணவனை இழந்த பெண்கள் வாழ்கின்றனர். இவர்கள் யுத்தத்தின் விளைவாக பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

இவ்வாறு கொழும்பில் இருந்து வெளியாகும் The Sunday Leader ஆங்கில ஊடகத்தில் Maryam Azwer எழுதியுள்ள செய்திக் கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை பதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

26 வயதுடைய யோகநாதன் ராதிகாவிற்கு இரண்டு வயது கொண்ட ஒரு பெண் பிள்ளை உண்டு. இவர் மீள்குடியேற்றப்பட்ட மன்னாரின் மாந்தை மேற்குகில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கிறார்.

யுத்தத்தின் பின்னர் இயல்பு வாழ்க்கை வாழ முயற்சிக்கும் பல பெண்களைப் போலவே ராதிகாவும் பல்வேறு கடினங்களை எதிர்கொள்கின்றார். ஆனால் ராதிகா மேலும் ஒரு சுமையைச் சுமக்க வேண்டியவராக உள்ளார். இவர் கணவனை இழந்த பெண்ணாவார்.

30 ஆண்டுகளாக சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தத்தின் போது தமது கணவன்மாரை இழந்த ராதிகாவைப் போல பல பெண்கள் உட்பட வடக்கு கிழக்கில் தற்போது 89,000 வரையான கணவனை இழந்த பெண்கள் வாழ்கின்றனர். இவர்கள் யுத்தத்தின் விளைவாக பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

யுத்தத்தின் போது இவர்கள் தமது கணவன்மாரையும், வீடுகளையும் இழந்துள்ளனர். சமாதான காலத்திலும் கூட, இப்பெண்கள் சந்திக்கும் துன்பங்கள் தொடர்கின்றன. போரின் போது கணவன்மாரை இழந்த பெண்கள் தீர்வு காணவேண்டிய பல பிரச்சினைகள் உள்ளன.

இவர்களில் பெரும்பான்மையானவர்கள் மிகவும் பின்தங்கிய இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளதுடன், இவர்கள் பாதி கட்டப்பட்ட வீடுகளில் வாழவேண்டிய நிலையில் உள்ளனர். அத்துடன் இவர்களுக்கு இளம் பிள்ளைகள் உண்டு. இதனால் போரின் போது தமது கணவன்மாரை இழந்த பெண்கள் சமூகத்திலிருந்தும் பல்வேறு பாதுகாப்புப் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியவர்களாக உள்ளனர். இவ்வாறான பிரச்சினைகளை இவர்கள் தாமாகவே வென்றெடுக்க வேண்டியுள்ளனர்.

“வாழ்க்கை மிகவும் கடினமாக உள்ளது. எங்களுக்கு ஆதரவுகள் வழங்கப்படவில்லை. எங்களைப் போன்றோருக்கு உதவி செய்ய வேண்டும் என உண்மையில் யாரும் நினைப்பதில்லை” என ராதிகா தெரிவித்தார்.

தன்னையும் தனது மகளையும் பராமரித்துக் கொள்வதற்காக ராதிகா கூலித் தொழிலை நாடிச் செல்கிறார். “காட்டால் சூழப்பட்ட கிராமம் ஒன்றிலேயே நான் வாழ்கிறேன். இங்கிருந்து ஆறு கிலோமீற்றர் தூரத்திலுள்ள பேரூந்து நிலையத்தை துவிச்சக்கர வண்டியில் சென்றே நாங்கள் அடையவேண்டும். எனது வீடு அரைவாசி கட்டப்பட்ட நிலையில் உள்ளது. இந்த வீட்டில் தனியாக வாழ்வதற்கு நான் மிகவும் அச்சப்படுகின்றேன்” என ராதிகா தெரிவித்தார்.

“எமது வீடுகளைக் கட்டி முடிப்பதற்கு எங்களுக்கு தற்போது நிதி தேவைப்படுகின்றது. ஆனால் இதனைப் பெற்றுக் கொள்வதென்பது மிகவும் கடினமானதாகும். எமக்கு கடன் வழங்குவதற்கு யாரும் விரும்பவில்லை. ஏனெனில், இக்கடனை நாங்கள் எவ்வாறு மீள வழங்குவோம் என்பதில் கடன் வழங்கும் நிறுவனங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை” எனவும் ராதிகா விளக்கினார்.

ராதிகா போன்ற கணவனை இழந்த பெண்களுக்காக செயற்படும் மன்னார் பெண்கள் அபிவிருத்தி ஒன்றியத்தைச் சேர்ந்த மகாலக்சுமி குருசாந்தன், யுத்தத்தின் போது கணவனை இழந்த பெண்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக தெளிவான விளக்கத்தைக் கொண்டுள்ளார்.

“இவ்வாறான பெண்கள் பல்வேறு விதமான சமூக வடுக்களைக் கொண்டுள்ளனர். இவர்களை சமூகத்திலுள்ள மக்கள் விமர்சனக் கண் கொண்டே பார்க்கின்றனர். போரின் போது தமது கணவன்மாரை இழந்த இப்பெண்கள் வெளியில் தொழிலிற்குச் செல்லும் போதும் மக்கள் இவர்களைக் கண்காணிக்கின்றனர்” என மகாலக்சுமி தெரிவித்தார்.

இவ்வாறான பெண்கள் அவர்கள் வாழும் சமூகத்தின் பிறழ்வான கருத்துக்களால் உளவியல் ரீதியாக தாக்கமடைந்துள்ளனர் எனவும் இவர் மேலும் தெரிவித்தார்.

தமது கணவன்மாருக்கு என்ன நடந்திருக்கும் என்பது கூட இப்பெண்களில் கூடுதலானவர்கள் அறிந்திருக்கவில்லை. இவர்கள் தமது மரபுப்படி தமது கணவன்மாரிற்கான இறுதிக் கிரியைகளைக் கூட செய்ய முடியாதவர்களாக உள்ளனர்.

இதேவேளையில், இப்பெண்கள் தமக்கான வாழ்வை முன்னேற்ற முயல்கின்ற வேளையில், சமூக ரீதியாக இவர்கள் பெற்ற வடுக்கள் பெரும் தடையாக உள்ளதாக மன்னார் பெண்கள் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளரான Shreen Saroor சுட்டிக்காட்டியுள்ளார்.

“இப்பெண்கள் தொடர்பாக சமூகத்தின் பார்வை வேறுபட்டதாக உள்ளது. திருமணம் செய்து வாழும் ஏனைய பெண்களைப் போல கணவன்மாரை இழந்த இப்பெண்கள் நடாத்தப்படுவதில்லை. அவர்கள் தமக்கான தொழிலைத் தேடிப் பெற்றுக் கொள்வதில் பெரும் பிரயத்தனப்படுகிறார்கள். இப்பெண்களின் பொருளாதார தேவையைப் பூர்த்தி செய்ய வழிகாட்டுவது யார் என்ற பிரச்சினை உள்ளது. இவர்கள் வெளியில் வேலைக்குச் சென்றால் இவர்களது பிள்ளைகளைப் பராமரிப்பது யார்? ஆகவே இவர்கள் சம்பாதித்துக் கொண்டு தமது நாளாந்த வாழ்வுத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய முறைமை ஒன்று உருவாக்கப்பட வேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள கணவன்மாரை இழந்த பெரும்பாலான பெண்கள் 35 வயதிற்குட்பட்டவர்கள் என திருகோணமலையில் உள்ள பெண்களுக்கான தொண்டர் சேவை அமைப்பைச் சேர்ந்த இதயராணி சித்ரவேல் தெரிவித்துள்ளார்.

“இவர்கள் இளவயதுப் பெண்களாக இருப்பதால் சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகளை முகங்கொடுக்கின்றனர். இதனால் இவர்கள் வெளியில் வேலைக்குச் செல்வதில் சிரமப்படுகின்றனர். அத்துடன் இவர்கள் தமது கணவன்மாரின் ‘உழைப்பிலேயே’ தங்கி வாழ்ந்துள்ளனர்” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இளம் பிள்ளைகளைக் கொண்ட இப்பெண்கள் அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் கல்வித் தேவையைப் பெற்றுக் கொடுப்பதில் மேலும் சிரமப்படுகின்றனர். ஆகவே இவர்களது பிரச்சினைகள் கவனத்திலெடுக்கப்பட்டு, கணவன்மாரை இழந்த இப்பெண்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” எனவும் இதயராணி தெரிவித்தார்.

தற்போது இப்பெண்களிற்கு உதவிகளை மேற்கொள்வதற்கான முயற்சிகள் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், குறிப்பாக இப்பெண்கள் நடைமுறையில் சந்திக்கின்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என Shreen Saroor சுட்டிக்காட்டியுள்ளார்.

“சிறிலங்கா அரசாங்கம் இப்பெண்களிற்கான சில திட்டங்களை முன்னெடுக்கின்ற போதிலும், போரின் போது கணவன்மாரை இழந்த இப்பெண்களின் வாழ்வில் இத்திட்டங்கள் மாற்றங்களை உண்டுபண்ணுவதாக அமையவில்லை. அதாவது இவர்களிற்கு பணத்தைக் கொடுப்பதைக் குறிக்கவில்லை. இப்பெண்கள் சமூகத்தில் நலிவற்றவர்களாக இருப்பதால் அமைப்பு ரீதியாக நாம் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியுள்ளது” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இவ்வாறான பெண்கள் இலாப மீட்டுகின்ற தொழிற்சாலைகளில் பணிக்குச் சேர்க்கப்படும் சம்பவங்கள் இடம்பெறுவதுடன் இவர்களின் உழைப்பு சுரண்டப்படுவதையும் எங்களால் அறியமுடிகின்றது. உண்மையில் வடக்கு கிழக்கில் வாழும் பெண்கள் வழமையாக கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு, வீட்டுத் தோட்டம் போன்ற சுயதொழில்களிலேயே அதிகம் ஈடுபட விரும்புவதால் இவ்வாறான வாழ்வாதாரத் தொழில்களை மேற்கொள்வதற்குத் தேவையான வசதிவாய்ப்புக்கள் ஒழுங்குபடுத்திக் கொடுக்கப்பட வேண்டும். இது இவர்களுக்கு நன்மைகளைப் பெற்றுத்தரும்” என சரூர் தெரிவித்தார்.

“சமூக வடுக்களுக்கு அப்பால், வடக்கு கிழக்கில் வாழும் போரின் போது தமது கணவன்மாரை இழந்த பெண்கள் தமது பகுதிகளில் நிலவும் இராணுவ மயமாக்கலால் பிறிதொரு பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். இப்பெண்களின் வாழ்க்கையில் இராணுவமயமாக்கலும் பெரிதும் தடையாக உள்ளது. இயற்கை வளங்கள் உள்ள சில பிரதேசங்கள் முற்றிலும் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இதனால் இப்பெண்கள் தமக்குத் தேவையான விறகுகளைப் பெற்றுக் கொள்வதற்குக் கூட காடுகளிற்குள் பயமின்றி சென்று வரமுடியாத சூழல் நிலவுகின்றது” எனவும் சரூர் தெரிவித்தார்.

இவ்வாறான தடைகள் உள்ள போதிலும் இப்பெண்கள் நம்பிக்கையுடன் வாழ முயல்கின்றனர். “நான் எனது கணவரை யுத்தம் நிறைவுறுகின்ற தருணத்தில் அதாவது ஏப்ரல் 22, 2009 ல் இழந்தேன். எனக்கு இரு மகள்மார் உண்டு. இவர்களில் ஒருவர் திருமணம் செய்துவிட்டார். மற்றைய மகள் என்னுடன் வாழ்கிறார்” என ராதிகா வாழும் அதே கிராமத்தில் வாழும் 47 வயதுடைய கே.ஜெயந்தி தெரிவித்துள்ளார்.

இவரது வீடும் இன்னும் முழுமையாகக் கட்டி முடிக்கப்படவில்லை. இவர் மாதம் எவ்வளவு தொகையை வருமானமாகப் பெற்றுக் கொள்கிறார் எனக் கேட்டபோது, “மாதமா? அதனைக் கணித்துக் கூறுவது சிரமமானது. நான் மிக்சர் உற்பத்தியில் ஈடுபடுகின்றேன். அதனை விற்க முடிகின்ற காலத்தில் மட்டுமே அதனை என்னால் மேற்கொள்ள முடிகின்றது. நாளாந்த வாழ்வை எதிர்நோக்குவதென்பது மிகவும் கடினமான காரியமாக உள்ளது” எனவும் ஜெயந்தி தெரிவித்தார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: