விவசாய நிலத்தைக் கையகப்படுத்தி புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்’

மேலை நாடுகளில் பிரபலமான பார்முலா ஒன் கார் பந்தயம் தில்லி நொய்டாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள “புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்’ திடலில் கோலாகலமாகத் தொடங்கப்பட்டுவிட்டது. உலகம் முழுவதும் உள்ள கார் பந்தய வீரர்களாலும், ரசிகர்களாலும் மோட்டார் கார் ஒலிம்பிக்ஸ் என்று கருதப்படும் இந்த நிகழ்ச்சியில், இந்திய அரசின் பிரதிநிதியாக விளையாட்டுத் துறை அமைச்சர்கூடப் பங்கேற்கவில்லை, அழைக்கப்படவில்லை என்பதுதான் உண்மை.
அமைச்சர் அஜய் மக்கான் தான் அழைக்கப்படவில்லை என்பதைப் பொருள்படுத்தாமல், “நான் என்ன சினிமா நட்சத்திரமா அல்லது கூட்டத்தை வசப்படுத்தும் அய்ட்டம் கேர்ளா?’ என்று கிண்டலாகக் கேட்டிருப்பது நியாயம்தான். அவர் தங்க மங்கை உஷா நடத்தும் தடகளப் பயிற்சி அகாதெமி நிகழ்ச்சியில் பங்கேற்க கேரளம் சென்றுவிட்டார்.
அமைச்சர் அழைக்கப்படாததற்கு மிக முக்கிய காரணம் உண்டு. இந்தக் கார் பந்தயத்துக்கு வரி விலக்கு, தீர்வை விலக்கு அளிக்க விளையாட்டு அமைச்சகம் மறுத்துவிட்டது என்பதுதான் காரணம். இது ஊரறிந்த ரகசியம்.
பார்முலா ஒன் கார் பந்தயம் இந்தியாவுக்கு வந்துவிட்டது என்பதற்காகப் பெருமை கொள்வதா அல்லது இதனால் யாருக்கு லாபம் என்று நமக்கு நாமே கேள்வி கேட்டுக்கொள்வதா?
ஜேபி ஸ்போர்ட்ஸ் இன்டர்நேஷனல் அமைப்பு இந்தக் கார் பந்தயத் திடலை 40 கோடி அமெரிக்க டாலர்கள் செலவில், 2,500 ஏக்கர் பரப்பில் 5.14 கி.மீ. சுற்றுப்பாதை இருக்கும் வகையில், சர்வதேசத் தரத்துக்கு உருவாக்கியுள்ளது என்பது நிச்சயமாக இந்தியாவுக்குப் பெருமைதான். இதற்கான இடத்தை அரசு பலவந்தமாகக் கையகப்படுத்தி இவர்களிடம் வழங்கியதும், உரிய இழப்பீடு கிடைக்கவில்லை என்று விவசாயிகள் போராட்டம் நடத்துவதும் மறக்கப்படும் பட்சத்தில், இது மிகப் பெரும் சாதனை. இதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
இதனால் யாருக்கு லாபம்? இந்திய அரசுக்கு என்ன வருவாய் கிடைத்துவிடும்? என்று பார்க்கும்போது, சொல்லிக்கொள்ளும்படியாக ஒன்றும் இருக்காது என்பதுதான் உண்மை.
இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் (ஐபிஎல்) எவ்வாறு இந்தியாவின் பெருந்தொழிலதிபர்களும், அரசியல்வாதிகளின் பினாமிகளும் ஒவ்வொரு அணிக்கும் பங்குதாரர்களாக இருந்து பல நூறு கோடி சம்பாதிக்கின்றார்களோ, அதேபோன்றுதான் இந்தியாவின் கிராண்ட் ப்ரீ கார் பந்தயங்களிலும் நடக்கப்போகிறது.
ஃபோர்ஸ் இந்தியா பார்முலா ஒன் அணியின் 42.5 விழுக்காடு உரிமையை 10 கோடி அமெரிக்க டாலர் கொடுத்து வாங்கி, விஜய் மல்லையாவுடன் இணைப் பங்குதாரராக மாறியுள்ளது சகாரா குழுமம். இது தொடக்கம்தான். இன்னும் பல அணிகள் உருவாகும். இந்தியாவில் தொடர்ந்து கார் பந்தயங்கள் நடக்கும். இவை யாவும், தனியார் தொலைக்காட்சிகளில், தற்போது கிரிக்கெட் ஒளிபரப்பாவது போலவே ஒளிபரப்பாகும். பட்டணம் முதல் பட்டிதொட்டி வரை உள்ள அனைத்து மக்களும் இந்தக் கார் பந்தயங்களை வீட்டுத் தொலைக்காட்சி முன்பாக உட்கார்ந்து பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். இதற்காக தொலைக்காட்சி நிறுவனங்கள் தரும் பல நூறு கோடி ரூபாய், இவர்களது முதலீட்டுக்குக் கிடைக்கும் எளிய, உழைப்பில்லா லாபமாக இருக்கும்.
குதிரைப் பந்தயத்தில் பெட்டிங் உள்ளதைப்போல, கார் பந்தயத்திலும் உள்ளூர் அளவில் பெட்டிங் நடக்கும். ஒரு நம்பர் லாட்டரி போன்ற முறைகேடுகள் நடக்கும். மக்கள் தங்கள் பணத்தை தற்போது மதுவுக்கு இழப்பதைப்போல, இத்தகைய பந்தயங்களுக்கும் இழப்பார்கள்.
இத்தகைய கார் பந்தயங்களைப் பார்த்துப் பார்த்து, நம் சாலைகளில் இளைஞர்கள் சாதாரண கார்களிலேயே இந்த வீரதீரங்கள் நடத்த முற்படுவார்கள். அது உளவியல் ரீதியில் தன்னிச்சையாக நடைபெறும். அப்போது இந்தியாவில் கார் விபத்தில் சாலைகளில் இறப்போர் எத்தனை பேராக இருப்பார்கள்?
இந்தியாவில் சாலை விபத்தில் இறப்போர் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றனர். 2008-ல் 3,40,794 பேர், 2009-ல் 3,57,021 பேர், 2010-ல் 3,84,649 பேர் இறந்து இருக்கிறார்கள். ஆண்டுதோறும் 30,000 மரணங்கள் கூடிக்கொண்டே போகின்றன. கார் பந்தயங்கள் தொலைக்காட்சிகளில் தினமும் இடம்பெறத் தொடங்கிய பின்னர் இன்னும் வேகமாக சாவுகள் எண்ணிக்கை உயரும்.
தற்போது இந்தியாவில் 4 கோடி கார்கள் இருக்கின்றன. இதற்கே சென்னை, தில்லி, கொல்கத்தா போன்ற பெருநகரங்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. 2050-ம் ஆண்டு உலகில் அதிக கார்களை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா இருக்கும் என்று வேறு கணித்திருக்கிறார்கள். அப்போது இந்தியச் சாலை முழுவதும் எப்படியிருக்கும் என்பதைக் கற்பனை செய்யக்கூட முடியவில்லை.
இந்தக் கார் போட்டியில் கிடைக்கும் லாபம் முழுவதும் பல கணக்குகள் காட்டப்பட்டு, வரி குறைவாகச் செலுத்தப்படும் நிலையைத்தான் இவர்கள் உருவாக்குவார்கள். விளையாட்டை ஊழலற்றதாக முறைப்படுத்த, கொண்டுவர உருவாக்கப்பட்டுள்ள விளையாட்டு சட்ட மசோதாவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவிக்கிறது என்றால், இவர்களை யார்தான் கட்டுப்படுத்த முடியும்?
“”வளர்ச்சியையும், நாகரிகத்தையும் தடுத்துவிட முடியாது. உலகமயச் சூழலில் அரசு போலீஸ்காரர்போலச் செயல்பட்டு தனிநபர் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவது சாத்தியமல்ல. டிஸ்கோ, டேட்டிங், “பப்’ கலாசாரம் போன்று கார் பந்தயங்களையும் தடுக்க முயல்வது அறிவீனம்” என்றெல்லாம் வாதத்தை முன் வைப்பார்கள், அளவுக்கு அதிகமான வருமானம் ஈட்டி, தான்தோன்றித்தனமான வாழ்க்கை வாழும் நவநாகரிகப் பணக்காரர்கள்.
அடுத்த தலைமுறை உழைப்பை நம்பி, ஒழுக்கத்தோடு வாழ்ந்து, நமது பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும், பண்பாட்டையும் கட்டிக்காத்து உலகத்துக்கே வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். ஆனால், மேலைநாட்டு பாணியில் வாழ்வதுதான் நாகரிகம் என்று இன்றைய ஆட்சியாளர்கள் கருதுகிறார்கள்.
விவசாய நிலத்தைக் கையகப்படுத்தி இவர்களுக்குக் கொடுத்த அரசையே மதிக்காமல், விளையாட்டுத்துறை அமைச்சரைக்கூட அழைக்காமல் பார்முலா ஒன் போட்டி நடத்தத் துணிகிறார்கள் என்றால், இவர்களை யார் கண்காணிப்பது, கட்டுப்படுத்துவது? விதியே! விதியே! இந்தியாவை என்செயக் கருதி இருக்கின்றாயடா?

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: