கயிறே என் கதை கேள்! தூக்குத் தண்டனைக் கைதி முருகன்

ஆர்ப்பாட்டங்கள்… ஆவேசங்கள்… தீக்குளிப்புகள் என மொத்தத் தமிழகமும் கைக்​கொண்ட போராட்டங்களும், சட்ட ரீதியான முன்னெடுப்புகளும் பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவருடைய மரண தண்டனைகளுக்கு இடைக்​காலத் தடையைப் பெற்றுத் தந்திருக்கிறது.

மரணத்துக்கான தேதி அறிவிக்கப்பட்ட நாளிலும் அந்த மூவரும் உரக்கச் சொன்னது, ”நாங்கள் அப்​பாவிகள்!” என்றுதான்.

தூக்குத் தண்டனைக்கு ஆளாக வேண்டிய ஆட்கள்தான் இவர்கள் என்பதற்கு அதிகாரிகள் காட்டும் ஒரே ஆதாரம் இவர்களின் ஒப்புதல் வாக்குமூலத்தைதான்.

ராஜீவ் கொலையில் சம்பந்தம் இருப்பதை முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரும் அவர்களுடைய ஒப்புதல் வாக்குமூலத்திலேயே ஒப்புக்கொண்டுவிட்டார்கள். அப்படியிருக்க, வேறு சாட்சி எதற்கு?” என்கிறது சி.பி.ஐ. தரப்பு.

மனதில் நினைத்ததையும், மனசாட்சி இல்லாமல் கற்பனை செய்ததையும் மொத்தமாக எழுதி, சித்திரவதை​களின் அத்தனை வடிவங்களையும் எங்கள் மீது காட்டிக் கையெழுத்துப் பெற்றதுதான் ஒப்புதல் வாக்குமூலமா?” என்கிறார்கள் இந்த மூவரும்.

வழக்கறிஞர்கள் சிலர் மூலமாக… ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்ட விதம் குறித்து நாம் முருகனிடம் விசாரித்தோம்.

ராஜீவ் கொலை சம்பவத்துக்குப் பிறகு, விசாரணை வளையத்தில் சிக்கியது தொடங்கி, ஒப்புதல் வாக்குமூலத்துக்காக அனுபவித்த சித்திரவதைகள் வரை தன் நெடுந்துயரத்தை வாசகர்கள் முன்பு தன் தரப்பாக இறக்கி வைக்க முன்வந்தார் ஸ்ரீகரன் என்கிற முருகன்.

வழக்கறிஞர் வாயிலாகவே வந்திறங்கும் அவருடைய வார்த்தைகள் இங்கே உங்கள் முன்…

மரண மேகம் சற்றே விலகி நிற்கிறது. நிரந்தரமாக அது எப்போது எம்மைவிட்டு நீங்கும் என்பது தெரியவில்லை.

களத்தில் நெல் காயப் போட்டவர்கள் கறுத்திருக்கும் மேகத்தை எப்படிக் கவலையோடு பார்ப்பார்களோ, அதே தவிப்பில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி சிறைக்குள் பரிதவித்துக் கிடக்கிறோம்.

வெளி உலகம் எப்படி இருக்​கிறது? உறவுகள் எப்படி இருக்​கிறார்கள்? போக்கு​வரத்து தொடங்கி பூகோள அமைப்புகள் வரை எப்படி மாறி இருக்கின்றன என்பது தெரியாமல் சிறைக் கம்பிகளின் அரவணைப்புக்குள் 21 வருடங்களாக அடைபட்டுக் கிடப்ப​வர்கள் நாங்கள்.

சிறு வெளிச்சக்கீற்று எம் மீது விழாதா?’ என ஒவ்வொரு நாள் விடியலையும் ஏக்கத்தோடும் இயலாமையோடும் வெறிச்சிட்டுப் பார்க்கிறோம்.

இவ்வளவு​தான் வாழ்க்கையா?’ என்கிற இயலாமை மேலிட்ட சலிப்பு அடிக்கடி மனதுக்குள் எட்டிப் பார்க்கிறது.

செப்டம்பர் 9-ம் தேதி தூக்கு’ என்கிற செய்தியை அரசாங்கம் அறிவித்தபோது, இறுதி வரை எமது நியாயமும் தவிப்பும் எடுபடாமல் போய்விட்டதே என்கிற ஆதங்கமே இதயத்தில் திரையிட்டது.

அப்படியே 14.06.91 என்கிற தேதிக்கு எம்மை நினைவு சுழல் இழுத்துச் செல்கிறது…

ஸ்ரீகரன் (கி3) என்கிற நானும், நளினி (கி1) என்கிற என் மனைவியும் அன்றுதான் கைது செய்யப்பட்டோம். எம்மை சி.பி.ஐ. எஸ்.ஐ.டி-யைச் சேர்ந்த ஓர் உதவி ஆய்வாளரும் இரு காவலர்களும் சைதாப்பேட்டை பஸ் நிலையத்தில் வைத்து கைது செய்தார்கள்.

எதற்காக என்கிற கேள்வி எம் கண்ணில் நீராக உருண்டபோதும், அவர்கள் எவ்வித பதிலும் சொல்லாமலே ஒரு ஆட்டோவில் எங்களை ஏற்றிச் சென்றார்கள். அவர்களது விசாரணை அலுவலகமான ‘மல்லிகை’யில் ஆட்டோ நின்றது.

பிடிக்கப்பட்ட – கொண்டு செல்லப்பட்ட சிறு கணப் பயணத்துக்குள் நாங்கள் அனுபவித்த துயரம் எழுத்தில் சொல்ல முடியாதது. குரூரமும் வக்கிரமுமாக நகர்ந்த அந்தப் பயணத்தை என்னால் வாழ்விலும் மறக்க முடியாது.

என் மனைவி நளினி அப்போது இரண்டு மாத கர்ப்பவதி. ஆட்டோவின் பின் இருக்கையில் எங்கள் இருவரையும் நடுவில் அமரவைத்து, என் மனைவியின் பக்க ஒரமாக ஓர் உதவி ஆய்வாளரும், என் பக்கமாக ஒரு காவலரும் ஏறிக்கொண்டனர்.

மூன்று பேர் மட்டும் அமரக்கூடிய அந்தக் குறுகிய இடத்தில் நான்குபேர் அமர்ந்து இருந்த சூழலை உதவி ஆய்வாளர் எப்படிப் பயன்படுத்திக்கொண்டார் தெரியுமா?

கர்ப்பிணி என்றுகூடப் பார்க்காமல், என் கண் எதிரிலேயே என் மனைவி மீது அங்கச் சேட்டைகளில் ஈடுபட்டார். புழுவாகத் தவித்த என் மனைவியின் அவஸ்தையைத் தடுக்கக்கூட இந்த இயலாமைக்காரனால் முடியவில்லை.

எமக்கான கொடூர நரகம் தொடங்கிவிட்டது என்பதை அந்த நிகழ்வே எனக்குப் புரியவைத்தது.

ஒரு வார்த்தைப் பேசினாலும் தவறு என்கிற சூழலில் அருகே அமர்ந்திருந்த நளினியை வேதனையோடு பார்த்தேன். கண்ணீரும் கடும் துயரமுமாக தலைகுனிந்து இருந்​தாள்.

மல்லிகை எஸ்.ஐ.டி. அலுவல​கத்தில் ஆட்டோ நின்றது. அங்கே இருந்த உயர் அதிகாரி முன்னால் எங்களைக் கொண்டுபோய் நிறுத்தி​னார்கள். இந்த இரு நாய்களின் முதுகுத் தோலையும் அடித்து உரியுங்கள்! என உத்தரவு போட்டார்.

அத்தகைய ஏவலுக்​காகவே காத்திருந்​தவர்கள்போல, என்னைப் பக்கத்து அறைக்கு இழுத்துச் சென்றார்கள். எதிரே என் மனைவி நளினி.

கணவன் இழுத்துச் செல்லப்​படுவது கொல்லப்​படுவதற்காக என்றுகூட அவள் நினைத்திருக்கலாம், பதறி இருக்கலாம். பரிதவிப்போடு ஏதோ சொல்ல நினைத்தாள். கண்ணீரைக்கூட சுதந்திரமாக உதிர்க்க முடியாத அந்தக் கொட்டடியில் அவளால் என்ன பேசியிருக்க முடியும்?

தனி அறைக்கு என்னைக் கொண்டுவந்த அதிகாரிகள் முதலில் என் ஆடைகளைக் களைந்தார்கள். உலகின் பெருந்துயரம் – பிறர் முன்னால் ஆடைகள் அற்றுப்போய் அவமானம் சுமந்து நிற்பது.

நிர்வாணத்துக்கு லத்திக் கம்புகளாலேயே வரிவரியாய் ஆடை வரைந்தார்கள் அதிகாரிகள். ஆவேசம் என்றால் அப்படியொரு ஆவேசம்… பிரம்புகளே பிய்ந்து தொங்குகிற அளவுக்கு அடித்தார்கள்.

ஊரே கேட்கும் அளவுக்குக் கதறிய என் ஓலம் அந்த அதிகாரிகளின் மனதைக் கொஞ்சம்கூட அசைக்கவில்லை. மயக்கத்தின் முதல் நிலையில் மௌனம் சுமந்து கிடந்தேன். இனி அலறத் தெம்பில்லை. அலறியும் பலன் இல்லை.

உடல் எங்கும் கன்றிப் போய், உதடுகளில் இரத்தம் வழிந்த நிலையில் தூக்கி நிறுத்தினார்கள். ‘செத்தேன்’ என்கிற வார்த்தையோடு என் மூச்சு இழுத்துக்கொண்டு இருந்தது.

திடீரென, ”அய்யோ…” என்கிற அலறல். மயக்கம் தெளிந்து நிமிர்ந்தால் எதிரே கதறி அழுதபடி என் மனைவி நளினி. என் கோலத்தைக் காட்டுவதற்காக அவளைக் கொத்தாக இழுத்து வந்திருக்கிறார்கள்.

நான் இரத்தம் சொட்ட நின்றதும், அதிகாரிகளின் பிடியில் சிக்கியபடியே தலையில் அடித்துக்கொள்ள முடியாமல் நளினி கதறியதும் இப்போதும் மனதுக்குள் தகிப்பாகக் கொதிக்கின்றன.

நாங்க சொல்கிறபடி எல்லாம் நடந்துக்கலைன்னா, உனக்கும் இதே கதிதான்! என நளினியை நோக்கிக் கத்தினார்கள். அவள், அவரை ஏன் இப்படி அடிச்சீங்க?” எனக் கதற, உன்னோட காதலனை அடிச்சாத்​தானே உனக்கு வலிக்கும். அடி மட்டும் இல்லை… அவனைக் கொன்னே புடுவோம்…” என மிரட்டி அவளை இழுத்துச் சென்றார்கள்.

என்னை அவர்கள் கொன்றாலும் சரி… அறுத்துப்​போட்டு தின்றாலும் சரி… கர்ப்பவதியாக இருக்கும் என் மனைவியைத் துன்புறுத்தாமல் இருந்தாலே போதும் என்கிற சிறு ஆறுதலோடு வீழ்ந்து கிடந்தேன்.

என்னை அடித்துக் களைத்த அதிகாரிகள் ஓய்வு எடுப்பதற்காக விட்டிருந்த இடைவேளை அது.

சில நிமிடங்கள்தான் கடந்திருக்கும். ‘ஆ… அய்யோ…’ என்கிற பெரு அலறல். பக்கத்து அறையில் இருக்கும் நளினியின் குரல் அது என்கிற யூகிப்பு என்னைத் தவிக்க வைக்கிறது.

சிறு சிறு உறுப்புகளாக முழு வடிவம் சுமக்கப்போகும் குழந்தைக்குத் தாயின் அமைதியான சூழலும் நிம்மதியும்தான் மிக முக்கியத் தேவை. ஆனால், அந்தப் பச்சை சிசுவின் நிலையைக்கூட நினைத்துப் பார்க்காமல், அவளை பிரம்புகளால் பின்னி எடுத்திருக்கிறார்கள்.

பிறகு, ஒரு நாள் அவளை எதிர்கொண்டபோது, எப்படி எல்லாம் சித்திரவதை செய்தார்கள் என்பதை அவள் சொன்னாள். என் நிலை பரவாயில்லை என்கிற அளவுக்கு அவள் சுமந்த வேதனைகள் கொடூரமானவையாக இருந்தன.

நாள்வாரியாக தினமும் நடந்த சித்திரவதைகள் பற்றி இங்கே சொல்ல ஆரம்பித்தால், சித்ரவதைகளின் கொடூரம் உங்களுக்கே பழகிப்போகலாம். மனதின் ஈரம் இற்றுப்போகிற நிலையை உங்களுக்கு ஏற்படுத்திவிடக்கூடாது என்பது என் எண்ணம்.

சித்திரவதைகள் செய்வதற்கு சிறப்பு பயிற்சிகள் பெற்றவர்கள்போல் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் என்னை அவர்கள் வதைத்த விதம் தாங்க முடியாதது.

மரண பயத்தின் பீதியும், மோசமான விரக்தி மனநிலையும் எனக்குள் இருந்துகொண்டே இருக்கும்படி செய்தன அத்தனை சித்ரவதைகளும்.

உண்மையான குற்றவாளியைக்கூட இந்த அளவுக்கு வதைக்க மாட்டார்கள். ஆனால், எதையோ நோக்கி வழக்கை நகர்த்திச் செல்ல அதிகாரிகள் போட்ட திட்டம், என்னை அணு அணுவாக நரகத்தின் வயிற்றுக்குள் திணித்தது.

காயங்கள் ஆறாது,,,,,,

ஜூனியர் விகடன்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: