நாவாந்துறையில் நடந்தேறிய நர வேட்டை

கடந்த திங்கட்கிழமை இரவு தொடங்கி மறுநாள் காலை வரை யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் இனவெறிகொண்ட சிங்களப் பேரினவாத இராணுவ இயந்திரத்தின் கோரத்தாண்டவம் மையங்கொண்டு ஆடி ஓய்ந்திருக்கின்றது: அடக்குமுறையின் ஒட்டுமொத்த உருவம் வெளிப்பட்டிருக்கின்றது.

என்ன தான் தமிழர்களுக்கு அதைச் செய்கின்றோம், இதைச் செய்கின்றோம் என்று அரசாங்கம் சர்வதேசத்தை ஏமாற்றிக் கொண்டு நாடகமாடினாலும், தமிழர்களை நாங்கள் எக்காலத்திலும் சுயமாக இருக்க விடமாட்டோம் – அடிப்படை உரிமைகளைக் கூடத் தர முடியாது, மீறித்தமிழன் எவனாவது தலை தூக்கினால் இது தான் கதி என்பது போல சிறிலங்காவின் இராணுவம் வெறியாடித் தீர்த்திருக்கின்றது.

சிறிலங்காவின் பல பாகங்களிலும் “கிரீஸ் பூதம்” என்ற பெயரில் இனம்புரியாத ஒரு பதற்றநிலை தோற்றுவிக்கப்பட்டதும், அதன் பின்னணியில் அரச படைகள் செயற்பட்டதும் அம்பலப்படுத்தப்பட்ட உண்மை.

எல்லா இடங்களில் தோன்றுகின்ற மர்ம மனிதர்கள் படைச் சிப்பாய்களாகவோ, படை விட்டோடிகளாகவோ இருந்ததோடு பொது மக்களால் துரத்தப்படும் போது படை முகாம்களுக்குள் ஓடி மறைவதும், அல்லது பொது மக்களால் பிடிக்கப்பட்ட மர்ம ஆசாமிகளை அவர்களிடமிருந்து மீட்டுக் காப்பாற்றுவதில் அரச படைகள் நடந்து கொண்ட விதமும் “கிரீஸ் பூதங்களின்” பின்னணியில் செயற்படுவர்கள் யார் என்பதை எளிதில் புரிய வைத்தது.

சில இடங்களில் பிடிக்கப்பட்ட மர்மங்களைக் காப்பாற்றுவதற்காக படைகள் மக்களைத் தாக்கிய சம்பவங்களும் இடம்பெற்றன.

இந்த வரிசையில் தான் யாழ்ப்பாணத்தின் கரையோரக் கிராமமாகிய நாவந்துறைப் பகுதியில் இரவு நேரம் மர்ம நபர் நாடகம் ஆரம்பமாகியது.

மாலை நேரத்தில் நாவாந்துறை சென். நீக்கலஸ் மைதானத்தில் விளையாடிய பின்னர் இளைஞர்கள் கூடியிருந்து பலதையும் பற்றிப் பேசி விட்டுக் கலைவது வழமை.

அன்றைய தினமும் அதே போலவே இளைஞர்கள் கதைத்துக் கொண்டிருந்த போது சந்தேகத்துக்கிடமான முறையில் முச்சக்கரவண்டி ஒன்று இங்குமிங்குமாக உலா வந்ததை இளைஞர்கள் அவதானித்தார்கள்.

வந்தவர்களை இறக்கி விடடு முச்சக்கரவண்டி சென்று விட, மர்ம நபர்கள் மூவரும் சந்தேகத்துக்கிடமான முறையில் செயற்பட்டதை கண்ட இளைஞர்கள் அவர்களைப் பின் தொடரத் தொடங்கினர்.

இருளில் மறைவாகப் பின் தொடர்ந்த இளைஞர்களை மர்மமானவர்கள் காணவில்லை. சிறிது நேரத்தின் பின் மக்கள் தம்மைப் பின் தொடர்வதை அறிந்த அவர்கள் ஓட்டமெடுக்க ஆரம்பித்தனர்.

மர்ம நபர்களின் தோற்றம் பற்றி கலைத்துச் சென்ற இளைஞர்களில் ஒருவர் தெரிவிக்கையில்

“ அவர்கள் சாதாரணமானவர்கள் இல்லை. அவர்களது உடல் வாகும், திட காத்திரமும் சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள் என்பதனை எடுத்துக்காட்டியது. முகத்தை மூடி “குல்லா” த் தொப்பியும், உடல் முழுவதையும் மூடி “ஸ்பைடர்மான்”, “சுப்பமான்” போன்ற உடை அணிந்திருந்தார்கள். நாங்கள் எங்கள் கால்களால் அவர்களைத் துரத்தினோம், அவர்கள் ஓடவில்லை, பாய்ந்தார்கள். அவர்களது கால்களில் “ஸ்பிரிங்” பூட்டப்பட்ட சப்பாத்துகள் காணப்பட்டன. கைகளில் இயங்திர மனிதர்களைப் போன்று கூரிய முனைகளைக் கொண்ட விரல்கள் இருந்தன” என்றார்.

மர்ம நபர்களை தங்கள் கைத்தொலைபேசியிலும் பல இளைஞர்கள் பதித்து வைத்திருக்கின்றார்கள்.

அவர்களைக் கலைத்துச் சென்றதில் பொதுமக்களிடம் எந்தவொரு உள்நோக்கமும் இருந்திருக்க வாய்ப்பில்லை. திருடர்களிடமிருந்து தங்களை – தங்கள் ஊரைக் காத்துக் கொள்வதற்கான ஒரு முயற்சியே அது.

அவ்வேளையில் அந்த “அடையாளம் தெரியாத” அந்த நபர்கள் பொதுமக்களிடமிருந்து தப்பி கரையோரமாக அமைந்திருந்த இராணுவ முகாமுக்குள் புகுந்து கொண்டனர்.

கலைத்துச் சென்ற பொதுமக்கள் இராணுவ முகாமை அடைந்த போது அந்த “அடையாளம் தெரியாத” நபர்கள் முகாமுக்குள் நின்றதைப் பொது மக்கள் பலர் கண்டுள்ளனர்.

கொதித்தெழுந்த மக்கள் அவர்களை காவல்துறையிடம் ஒப்படைக்குமாறு கோரி சிறிலங்கா இராணுவத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக அவ்விடத்துக்கு வந்த இராணுவ உந்துருளி அணி படையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களில் ஐந்து பேரைக் கைது செய்தனர் என்றும் தெரிய வருகின்றது.

இவ்வேளையில் – முகாமுக்குள் புகுந்த நபர்களை பின்புற வாயிலுக்கூடாக அப்புறப்படுத்தும் முயற்சியைப் சிறிலங்காப் படையினர் செய்ய, அதனை அறிந்த மக்கள் தொடர்ந்தும் அந்த “அடையாளம் தெரியாத” நபர்களைக் கலைத்துச் சென்றனர்.

அவர்கள் எவர் கையிலும் சிக்காமல் தயாராக நின்ற “கன்ரர்” வாகனமொன்றில் ஏறித் தப்பி விட்டனர்.

இதனிடையே – ஏற்கனவே திட்டமிட்டு வைத்திருந்தது போல பெருமளவான படையினரும், காவல்துறையினரும் வாகனங்களில் கொண்டு வந்து குவிக்கப்பட்டு, பொது மக்கள் மீது தடியடிப் பிரயோகமும், வானை நோக்கி வேட்டுக்களும் தீர்க்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

அந்த “அடையாளம் தெரியாத” நபர்களைத் துரத்திய பொதுமக்கள், கூட்டம் கலைந்ததும் அமைதியாக அவரவர் வீடுகளுக்குள் அடங்கிப் போய் விட்டனர்.

கிட்டத்தட்ட நள்ளிரவு 11.30 மணியளவில் பிரதேசத்தில் படையினரைத் தவிர எவருமில்லை. மக்கள் அச்சத்துடனும், பதற்றத்துடனும் வீடுகளுக்குள் தூக்கத்தைத் தொலைத்து விட்டு விழித்திருந்தனர்.

அந்த நேரத்தில் தான் அந்த அராஜகம் அரங்கேறியது.

நாவாந்துறைப் பிரதேசத்திலிருந்து வெளியேறவோ உள்வரவோ எவரும் அனுமதிக்கப்படவில்லை.

இனவெறியும், மதுவெறியும் தலைக்கேறிய சிங்களப்படைகள் ஊழித்தாண்டவத்துக்குத் தயாராகின.

ஒட்டுமொத்தமாக நாவாந்துறையையும், அயல் கிராமங்களையும் சுற்றி வளைத்த படையினர் கேட்டுக் கேள்வியின்றி, வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து – பூட்டியிருந்த வீடுகளை உடைத்து உள் நுழைந்து வீட்டில் இருந்த ஆண்கள் அனைவரையும் வயது வேறுபாடின்றி, நோய் வாய்ப்பட்டவர்களைக் கூட தற தறவென்று இழுத்துச் சென்றிருக்கின்றனர்.

தமது பிள்ளைகளை- கணவனை கண்முன்னே அடித்து உதைத்து இழுத்துச் செல்வதைத் தடுக்க முயன்ற பெண்களும் ஈவு இரக்கமின்றி தாக்கப்பட்டிருக்கின்றனர்.

சம்பவம் இடம்பெற்றது சந்தையை அண்டிய பகுதியில். அங்கு கூடியிருந்தவர்கள் மட்டும் தான் சம்பவத்துடன் தொடர்புபட்டிருந்தனர்.
ஆனால் இங்கே எவ்வித வேறுபாடுமின்றி, கையில் கிடைத்தவர்கள் எல்லாம் இழுத்துச் செல்லப்பட்டார்கள்.

சுமார் 150 க்கும் மேற்பட்ட ஆண்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். அவர்களில் 30 பேருக்கு மேற்பட்டவர்கள் பொது இடத்தில் வைத்து கை கால்கள் முறிக்கப்பட்டனர்.

மாட்டுப்பட்டவர்கள் எவரும் இனியொரு தரம் இவ்வாறானதொரு செயற்பாட்டில் ஈடுபடக் கூடாது என்பது போல எலும்புகள் நொருக்கப்பட்டன. மீள முடியாத அளவுக்குத் தாக்கப்பட்டனர்.

ஏனைய இடங்களில் மர்ம மனிதர்களைப் பிடித்தவர்கள் அல்லது எதிர்த்தவர்களே படையினரின் தாக்குதல்களுக்கு இலக்கானார்கள்.

ஆனால் இங்கே ஒட்டு மொத்த கிராமமே பாதிப்புக்குள்ளானது.

நாடகத்தை அரங்கேற்றி நர வேட்டை தொடங்கிய சிங்களப் படைகள் நாட்டிலுள்ள தமிழர்கள் அனைவருக்கும் பாடமொன்றைப் புகட்டுவதற்குத் தலைப்பட்டது.

இன்று நாவாந்துறையில் நடந்தது, இனி எங்கும் நடக்கலாம், எங்கென்றாலும் நீங்கள் (தமிழர்கள்) அடங்கித் தான் ஆகவேண்டும். மாறாக ஆடினீர்கள் என்றால் இது தான் நடக்கும் என்பது தான் அந்தப் பாடம்..

ஆனால் நினைத்தது ஒன்று – நடந்தது மற்றொன்று.

மக்கள் கொதித்தெழுந்ததை யாராலும் தடுக்க முடியவில்லை.

இப்போதும் அந்தப் பகுதியில் மக்கள் கொந்தளித்த வண்ணமே இருக்கின்றனர்.

மக்களுக்குப் பாதுகாப்பளிக்கின்றோம் என்று சொல்லிக் கொண்டு மக்களைக் கொத்தடிமைகளாக நடத்துவதை வெளிப்படுத்தி விட்டது சிறிலங்கா இராணுவம்.

யார் எவரென்றில்லாமல், வயது வேறுபாடின்றி மக்களைத் தாக்கிக் காயப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் தாக்கப்பட்டவர்களை கிட்டத்தட்ட 8 மணித்தியாலயங்களுக்கு மேல் தண்ணீர் கூடக் கொடுக்காமல், இரத்தம் சொட்டச் சொட்ட மருத்துவ ஏற்பாடுகள் எதுவுமில்லாமல், தடுத்து- தவிக்க வைத்ததன் மூலம் சர்வதேச மனிதஉரிமைச் சட்டங்கள் கூட அவமதிக்கப்பட்டிருக்கின்றன.

என்ன தான் மேற்குலக நாடுகள் போர்க்குற்றம் பற்றியும், மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாகவும் தொண்டை கிழியக் கத்தினாலும், நாங்கள் (ராஜபக்ச அன் பிரதர்ஸ்) நினைத்ததைத் தான் நடத்துவோம், பௌத்த சிங்கள நாடாகிய சிறிலங்காவில் தமிழர்கள் தங்களைக் காத்துக் கொள்வதற்குக் கூட நாதியற்றவர்கள் என்பதனைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறது நாவாந்துறைச் சம்பவம்.

ஆனால் – மறுபுறத்தே இத்தகைய மக்கள் கொந்தளிப்புக்கள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றது என்பதனைச் சிந்திக்கத் தவறிவிட்டது சிறிலங்கா அரசாங்கம்.

விடுதலைப் புலிகளின் காலத்தில் படையினருக்கெதிராக வீதிக்கு வீதி போராட்டங்கள் இடம்பெற்ற போது மக்கள் தூண்டி விடப்பட்டார்கள் என்று மக்கள் எழுச்சிக்குப் “புலிச்சாயம்” பூசிய சிறிலங்கா அரசு, இப்போது உணர்வுபூர்வமாக, தம்மைத் தாமே காத்துக் கொள்ள வேண்டிய நிலையில் மக்களால் முன்னெடுக்கப்படும் இத்தகைய போராட்டங்களுக்கு எவ்வாறு அர்த்தம் கற்பிக்கப் போகின்றது?

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: