வடக்கு, கிழக்குப் பகுதிகளை சிங்கள மயமாக்கும் சதித்திட்டத்தின் பணிகள் மிகவும் சூட்சுமமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வன்னிப் பிரதேசத்திலும் யாழ்ப்பாணப் பிரதேசத்திலும் இதன் நடவடிக்கைகள் முழுவீச்சுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக வன்னிப் பிரதேசத்தின் முல்லைத்தீவுக் கரைவலைப்பாடு மீன்பிடி பெரும்பாலும் தமிழ் மீனவர்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பான்மையின மீனவர்கள் எதுவித தடையுமின்றி கரைவலைப்பாடு மீன்பிடியில் ஈடுபடுகின்றனர்.
முல்லைத்தீவில் இயன்றளவில் சுமார் 10 ஆயிரம் பெரும்பான்மையின மீனவர்கள் மீன்பிடிப்பதில் ஈடுபட்டுள்ளனர். கொக்கிளாய் முதல் சுண்டிக்குளம் வரையிலான கிலாகத்தை, மாதிரிக் கிராமம், உப்புமாவெளி, தூண்டாய், அளம்பில், செம்மலை, நாயாறு, கொக்குத் தொடுவாய், கருநாட்டுக் கேணி ஆகிய பிரதேசங்களில் தமிழ் மீனவர்கள் குடியேற்றப்படவும் இல்லை. மீன்பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்படவும் இல்லை.
இதன் ஒரு கட்டமாகக் கொக்குத்தொடுவாய் முதல் சுண்டிக்குளம் வரையிலான முல்லைத்தீவின் கரையோரப் பகுதிகளில் பத்தாயிரம் சிங்களக் குடியேற்றங்களைச் செய்வதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
நந்திக் கடலில் மீன்பிடிப்பதற்கு எமக்கு அனுமதி இல்லை. ஆனால் இந்தப் பிரதேசங்களில் பெரும்பான்மையின சிங்கள மீனவர்கள் நேரடியாகப் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற்று மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். தமிழ் மீனவர்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளனர். எமது நந்திக்கடலில் சிப்பாய்களும் சிங்கள மீனவர்களும் இறால் பிடிப்பதில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மண்ணில் பிறந்த தமிழ் மீனவர்கள் செய்வதறியாது கைகளைப் பிசைந்துகொண்டு இருக்கின்றனர். முல்லைத்தீவு மீனவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுப் பெரும்பான்மை இன மீனவர்களுக்கு வழங்கப்படுவது குறித்து அரசின் கவனத்துக்குக் கொண்டு வரப்படும். அரசு உரிய நடவடிக்கை எடுக்காது அசண்டையீனமாக நடந்தால், வழக்குத் தொடரப்படும். இவ்வாறு தெரிவித்தனர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீதரன் மற்றும் சுமந்திரன் ஆகியோர்.
இந்த விடயம் தொடர்பாக அண்மையில் அந்தப் பகுதிக்கு விஜயம் செய்து அந்தப் பகுதி மக்களைச் சந்தித்த போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.இதேபோன்று இன்னொரு விடயத்தை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
அதாவது ஒரு காலத்தில் புலிகளின் தலைநகர் என்று வெளிநாடுகளால் வர்ணிக்கப்பட்டு வந்த கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஜெயபுரம் கிராமத்தில் வீதி ஒன்றுக்கு மஹிந்தராஜ பக்ஷ மாவத்தை என்ற பெயர் பொறிக்கப்பட்ட பலகை நடப்பட்டுள்ளதாம். ஜெயபுரத்தில் இருந்து பல்லவராயன் கட்டு நோக்கிச் செல்லும்போது ஜெயபுரம் சந்தைக்கு அருகில் இருக்கும் இரண்டு வீதிகளில் ஒன்றுக்கு மஹிந்த ராஜபக்ஷ மாவத்தை என்ற பெயரும் மற்றைய வீதிக்கு அழுத் மாவத்தை என்ற பெயரும் சூட்டப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
வெள்ளை வர்ணம் பூசப்பட்ட பலகையில் கறுப்பு மையால் பிரஸ்தாப வீதிகளின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இன்னும் சில வீதிகளுக்கு வேறு பல சிங்களப் பெயர்கள் இடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
இலங்கைப் படைகள் தமிழ் பகுதிகளை ஆக்கிரமிக்க மேற்கொண்ட போரின் பின்னர் தற்போது இந்த இரண்டு விடயங்களும் கடந்த சில நாள்களுக்கு முன்னர் நடந்தேறியுள்ளன.
கிளிநொச்சி உள் வீதிகளில் இந்த அடையாளங்களை இடுவதன் மூலம் தமிழ் ஊடகங்கள் மற்றும் ஆர்வலர்கள் கண்களிலிருந்து இதை மறைத்துச் சிங்கள மயமாக்கலை மேற்கொள்ளும் இரகசியத் திட்டம் தற்போது அம்பலமாகியுள்ளது.
அது மட்டுமல்லாமல் இந்தப் பெயர்ப்பலகைகளைப் பாதுகாக்கும் நோக்கில் அவற்றுக்கு அருகில் பொலிஸார் காவலுக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். பெயர்ப்பலகையை நிழல்படம் எடுக்க முற்படும் பொதுமக்களும் பாதசாரிகளும் அவதானிக்கப்படுவதால் மக்கள் அஞ்சி அதைத் தவிர்த்து வருகின்றனர்.
தமிழர்களின் ஜெயபுரம் கிராமத்தை மஹிந்த ராஜபக்ஷ மாவத்தை யாக மாற்றி சிங்கள கிராமங்களாக அடையாளப்படுத்தும் நடவடிக்கைகளை மஹிந்த அரசு மேற்கொண்டு வருகிறது.
கிளிநொச்சியில் முன்னர் சந்தை இருந்த இடத்தில் புத்த சின்னங்களை நிறுவி அதனை சுமார் இரண் டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக காட்டிக்கொள்ள அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
காணிகளை ஆக்கிரமித்து அவற்றில் புத்தர்சிலைகள் மற்றும் கட்டடங்களை நிறுவி தமிழர்களின் இருப்பைக் கேள்விக்குறியாக்கும் நடவடிக்கைகளில் அரசு தொடர்ந்தும் ஈடுபட்டு வருவது யாவரும் அறிந்த விடயம்.
இதன் ஒரு வெளிப்பாடாக அற்ப சலுகைகளுக்காகச் சங்கங்களை அமைப்பது, சிங்களக் கலாசார விழாக்களை நடத்துவது போன்ற விடயங்கள் ஊடாக சிங்கள மயமாக்கலை அரசு மேற்கொண்டு வருகின்றது. இதற்கு ஒரு சில தமிழ் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் துணை போகின்றார்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது.
இதேபோன்று குறிப்பாக அண்மையில் பலாலி உயர்பாதுகாப்பு வலயப் பிரதேசத்தில் 28 புத்தர் சிலைகள் கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இதன் ஊடாக பலாலியில் பௌத்த சமயம் இருந்ததற்கான ஆதாரங்களை உருவகப்படுத்தி வருகிறது மஹிந்த அரசு.
தமிழ் இனத்தின் பண்பாடு, கலாசாரம், இன உணர்வு, சமூகக் கட்டமைப்பு என்பவற்றை வளர்ப்பதில் அல்லது பேணிப் பாதுகாப்பதில் பெரும் பங்காற்றியது யாழ்ப்பாண மாவட்டமே. அவ்வாறான யாழ்.மாவட்டத்தில் தற்போது அதனது அடித்தளங்களை முற்றாக அழித்து, யாழ். மக்களை முற்றாகத் திசை திருப்பும் நடவடிக்கையில் சிங்கள அரசும் அதனுடன் சேர்ந்தியங்கும் சக்திகளும் செயற்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக மக்கள் மிகவும் விழிப்படைய வேண்டும்.
Filed under: ஈழம் |
மறுமொழியொன்றை இடுங்கள்